Thursday, January 27, 2011

தமிழக மீனவரின் குடும்பத்திற்கு அரசு பணி.

இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்ட மீனவர் ஜெயக்குமாரின் மனைவிக்கு அரசு பணிக்கான நியமன உத்தரவு நேற்று வழங்கப்பட்டது.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள புஷ்பவனம் கிராமத்தைச் சேர்ந்த மீனவர் ஜெயக்குமார் கடந்த 22-ம் தேதி இலங்கை கடற்படைக் கும்பலால் கொடூரமாக கழுத்தை இறுக்கிக் கொல்லப்பட்டார்.

இலங்கைப் படையினரின் இந்த வெறிச் செயல் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சி மற்றும் அதிருப்தி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் அவரது குடும்பத்தினருக்கு முதல்வர் நிவாரண நிதியாக ரூ. 5 லட்சம் உடனடியாக வழங்கும்படி உத்தரவிட்டார். உத்தரவு பிறப்பித்த அன்றே ஜெயக்குமார் மனைவியிடம் நிவாரணத் தொகை அளிக்கப்பட்டது.

அன்மையில் சென்னை வந்த மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் இந்த சம்பவம் குறித்து முதல்வர் தெரிவித்தார். இது போன்று தமிழக மீனவர்கள் அடிக்கடி தாக்கப்படுவதாகவும், இதனைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை அரசை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இதற்கிடையே முதல்வர் கருணாநிதி ஜெயக்குமார் மனைவி முருகேஸ்வரிக்கு அரசு வேலை வழங்க உத்தரவிட்டுள்ளதாக ஏ.கே.எஸ்.விஜயன் எம்.பி. தெரிவித்திருந்தார். அந்த உத்தரவின்படி முருகேஸ்வரிக்கு ஆறுகாட்டுத்துறை அங்கன்வாடி மையத்தில் உதவியாளராக நியமிக்கப்பட்ட பணி உத்தரவு நேற்று வழங்கப்பட்டது. இந்த உத்தரவை ஏ.கே.எஸ்.விஜயன் எம்.பி. ஜெயக்குமார் மனைவியை நேரில் சந்தித்து வழங்கினார்.

No comments:

Post a Comment