கொடைக்கானல் போன்ற மலைப் பகுதிகளில் அதிகபட்சமாக இரண்டு அடுக்கு மாடிக் கட்டடங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். ஆனால் ஜெயலலிதாவும் அவரது அமைச்சரவைச் சகாக்களும் இனைந்து, அங்கு 7 மாடிகளைக் கொண்ட ஆடம்பர சொகுசு ஹோட்டலைக் கட்ட அனுமதி வழங்கினர். இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை இரண்டாவது சிறப்பு நீதிமன்ற நீதிபதி இரா.கிருட்டிணன்,பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் நிர்வாகத்திடம் பணம் பெற்றுக்கொண்டு,கட்டட விதிகளைத் தளர்த்தி அனுமதி அளித்ததற்காக ஜெயலலிதாவுக்கும் அவரது அமைச்சரவை சகாக்கள் மற்றும் அதிகாரிகள் 4'பேருக்கும் தனித் தனியாக ஓராண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
ஜெயலலிதாவுக்குத் தண்டனை விதிக்கப்பட்ட தகவல் வெளியானதும், மாநிலம் முழுவதும் வன்முறைப் போராட்டங்கள் வெடித்தன. கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவிகள் கல்விச் சுற்றுல்லா சென்றுவிட்டுத் திரும்பியபோது, தருமபுரியை அடுத்த இலக்கியம்பட்டி என்ற இடத்தில், மாணவிகள் வந்த பேருந்தை மறித்து,தீ வைத்து அ.தி.மு.க.வினர் எரித்தனர். இதில் ஹேமலதா, கோகிலவாணி, காயத்திரி ஆகிய மூன்று மாணவிகள் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர்.பிளசன்ட் ஸ்டே வழக்கின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதா மேல் முறையீடு செய்தார்.