பிற்படுத்தப்பட்ட - மிகவும் பிற்படுத்தப்பட்ட - தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த
மாணவர்கள் குறைந்த மதிப்பெண் பெற்றிருந்தாலும்
பொறியியல் கல்லூரியில் சேரலாம்
என்கிற விதிமுறையை கலைஞர் அரசுதான் அன்றைக்கு ஏற்படுத்தியது!
"எஞ்சினியரிங் படிப்பில் சேருவதற்கான தகுதி மதிப்பெண்ணை உயர்த்தியதற்கு சென்னை ஐகோர்ட் தடை -ஜெயலலிதாவுக்கு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் நன்றி" என்று "தினத்தந்தி"நாளேடு கோட்டை எழுத்துகளில் ஒரு செய்தியினை வெளியிட்டுள்ளது.
பொறியியல் கல்லூரிகளில் பிற்படுத்தப்பட்ட,மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் கிராமப்புறங்களைச் சேர்ந்த மாணவர்கள்,முதல் முறையாக பொறியியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்கள் பயன்பெறவேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது தி.மு.க.அரசுதான்.
பிற்படுத்தப்பட்ட,மிகவும் பிற்படுத்தப்பட்ட,தாழ்த்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் குறைந்த மதிப்பெண்களைப் பெற்றிருந்தால், அவர்கள் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்து படிக்கலாம் என்று விதிமுறை ஏற்படுத்தியது தி.மு.க.அரசுதான்.
2008 - 2009 ஆம் ஆண்டு முதல் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான குறைந்தபட்ச மதிப்பெண்களை தி.மு.க.அரசு அனைத்துப் பிரிவினருக்கும் குறைத்து ஆணையிட்டதன்படி,பொதுப்பிரிவினருக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த மதிப்பெண்கள் 55 விழுக்காடு என்பதை 50 விழுக்காடு எனவும் பிற்படுத்தப்பட்ட கிறித்தவ வகுப்பினர்,பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் வகுப்பினர்,இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த மதிப்பெண்கள் 50 விழுக்காடு என்பதை 45 விழுக்காடு எனவும்-மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர் மரபினருக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த மதிப்பெண்கள் 45 விழுக்காடு என்பதை 40 விழுக்காடு எனவும்-பட்டியல் இனத்தவர் மற்றும் மலைவாழ் பழங்குடியினருக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த தேர்ச்சி இருந்தால் போதும் என்பதை 35 விழுக்காடு எனவும் தி.மு.க.அரசு குறைத்ததால் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்து படிக்கும் மாணவ மாணவியர் எண்ணிக்கை அதிகரித்தது.
ஆனால் 2011 - 2012 ஆம் ஆண்டிற்கு பொறியியல் கல்லூரி சேர்க்கைக்கு குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களாக பொதுப் பிரிவை சேர்ந்த மாணவர்கள் 50 சதவிகிதமும், இட ஒதுக்கீடு செய்யப்பட்ட வகுப்புகளைச் சார்ந்த மாணவர்கள் 45 சதவிகிதமும் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என்று அகில இந்திய தொழில் நுட்பக் கல்விக் குழுமம் பொதுத் தேர்தலுக்கு முன்பே ஓர் அறிவிப்பினைச் செய்தது.
அந்த அறிவிப்பு வந்ததும்,தமிழக அரசின் சார்பில் தி.மு.க.அரசு இருந்தபோதே அதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததோடு -அதனை தமிழகத்தில் இந்த ஆண்டு அமல்படுத்தமாட்டோம் என்று முதல்வராக இருந்த கலைஞர் அவர்கள் அறிவித்ததோடு,மத்திய அரசுக்கு அது பற்றி திட்டவட்டமாக அப்போதே தெரிவிக்கப்பட்டது.
ஆனால் தற்போது ஜெயலலிதாதான் மத்திய அரசின் அறிவிப்பினை எதிர்த்து நடவடிக்கை எடுத்ததைப் போலவும், சென்னை உயர்நீதிமன்றம் அதனை ஏற்றுக்கொண்டு விட்டது போலவும் செய்தி வெளியிட்டதோடு, அதற்காக ஜெயலலிதாவுக்கு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் நன்றி தெரிவித்ததாகவும் சில ஏடுகள் அதை மிகைப்படுத்தி புகழ்ந்திருக்கின்றன.
ஆனால் இட ஒதுக்கீட்டின் கீழே பொறியியல் கல்லூரியில் நுழைய விரும்புகின்ற மாணவர்களுக்கு மதிப்பெண்களை குறைத்து அவர்களை அந்தக் கல்லூரியிலேயே பயில வசதி செய்தி கொடுத்தது தி.மு.க.அரசுதான் - முதலமைச்சராக இருந்த கலைஞர் அவர்கள் தான் என்பதை அந்த வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் நன்றாகவே உணர்வார்கள்.
நன்றி : முரசொலி